Wednesday, March 15, 2006

தங்கமணி பதிவு

http://bhaarathi.net/ntmani/?p=214

ஸ்ப்ப்ப்ப்பா... ஜெயஸ்ரீயின் பின்னூட்டத்தை படித்து முடித்தவுடன் இப்படித்தான் தோன்றியது, பொறுமையும், நேரமும் வாதத்திறமையும் இருந்தால் எப்படி பட்ட உண்மைகளையும் விவாத களத்தில் நீர்த்து போக வைக்கலாம் என்பது இதை படித்தவுடன் தெளிவாகின்றது (உண்மை நிலை என்ன என்பது எழுதியவர்களின் மனசாட்சிக்கும் படிப்பவர்களின் மனசாட்சிக்கும் சபாஷ் போடுபவர்களின் மனசாட்சிக்கும் தெரியும்)...

ஜெயஸ்ரீ அவர்கள் தன் வாழ்க்கையிலிருந்தும் வாதகளத்தில் உள்ள பிறர் வாழ்க்கையும் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றார்.....

//. என் வாழ்க்கையில் தீண்டாமையோ, பஞ்சமர்களோ எங்கே வந்தார்கள்?
//
இதற்கு என் பதில் இது கதையல்ல நிஜம் என்ற என்பதிவில் சொன்னது இங்கேயும்
//செந்தில் கூறியது போன்று வாழ்க்கை நாம் இருக்கும் வட்டத்தையும் தாண்டியது, நாம் பார்க்கும் பார்வையையும் தாண்டியது நம் வட்டத்தை தாண்டி பார்க்கும் போது சில நிஜங்கள் முகத்தில் அறையும் அந்த நிஜத்தை பார்க்க சக்தி இருந்தால் பார்க்கலாம் அல்லது மீண்டும் நம் வட்டத்தினுள் சுருங்கிக்கொண்டு இனியெல்லாம் சுகமே என இருக்கலாம்.
//

//ஒரு தோட்டியை நான் பார்த்ததே இல்லை
//
பார்த்ததில்லை என்பதற்காக தோட்டிகள் சமூகத்திலே இல்லை என்கிறீர்களா, 1977ல் பிறந்த நான் தோட்டிகளை பார்த்திருக்கிறேன், ஒரு வேளை தோட்டிகளை பார்க்கமுடியாமல் வளர்க்கப்பட்டிருப்பீர் போல...

//எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து என்வீட்டில் பாம்பே கக்கூஸ் என்று சொல்லப்படும் ஒன்றுதான். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக என் வீட்டுக் கழிவறையை நான் தான் சுத்தம் செய்கிறேன். நான் ஊரில் இல்லாத/எனக்கு முடியாத நாள்களில் என் கணவர்
//
பாம்பே கழிவறையின் பேசின் சட்டியிலிருந்து அந்த மலம் எங்கே போகின்றது என எப்போதாவது யோசித்தீர்களா? கழிவறை கழுவப்படுவதோடு அந்த மலம் மாயமாகிவிட்டதா?, இல்லையே அதன் பின் அது செப்டிக் டேங்க் சென்று செப்டிக் டேங்க் நிரம்பியவுடன் நகராட்சிக்கோ,ஊராட்சிக்கோ மாநகராட்சிக்கோ 450 ரூபாய் கட்டிவிட்டு ஒரு சுபயோக சுப இரவில் நகராட்சியிலிருந்து வண்டியோடும் வாளியோடும் வரும் நகரசுத்தி தொழிலாளிக்கு சரக்கு போட பேரம் பேசி காசு கொடுத்துவிட்டு கதவையெல்லாம் தாழ்போட்டு இறுக்க மூடிவிட்டு ஊது பத்தி ரூம் ப்ரெஷ்னர் எல்லாம் போட்டுவிட்டு தூங்க போய்விட்ட தற்போது செப்டிக் டேங்கில் இருப்பதை மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்து (முன்பெல்லாம் முழுக்கவே வாளிதான்) எஞ்சிய கழிவுகளை வாளி வைத்து வழித்து எடுத்து ஊர் விழிக்கும் முன் அதை வண்டியில் ஏற்றி ஊருக்கு வெளியே கொட்டிவிட்டு செல்பவர்கள் இன்னமும் உள்ளனர், தன் வீட்டு கழிவறையை தானே கழுவுவதால் சாதி அழிந்ததாக பிரமை ஏற்படுத்த முயலும் ஜெயஸ்ரீ அடுத்தவன் வீட்டில் பேண்டதையெல்லாம் மொத்தமாக எடுத்து ஊற்றும் நகரசுத்தி தொழிலாளிகளை எல்லாம் பார்க்காமல் தான் இருந்திருப்பார், காசு வாங்கிக்கொண்டு கொல்லும் கூலிப்படையில் கூட இருக்கும் பிறப்பால் பிராமண சாதியை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இந்த நகரசுத்தி தொழிலாளியாக இருக்கின்றார்கள்?

சரி இதெல்லாம் ஜெயஸ்ரீ அறியாமல் நடப்பதாகவே வைத்து கொள்வோம், பொது கழிவறைகளை கழுவுபவர்கள் யாரென்று சற்று சிந்தித்திருப்பாரா?

//சுஜாதா வந்து பீயள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள். பிரச்சினை ஏன் யாராவது அள்ளவேண்டும் என்ற கேள்வியும் தீர்வு அவரவர் வீட்டில் அவரவரே அள்ளவேண்டும் என்றே நான் சொல்கிறேன். இதற்கும் (இந்து)மதத்திற்கும் என்ன சம்பந்தம்?
//
சுஜாதா வந்து பீயள்ள வேண்டும் என்று கூறியபிறகு ஏன் யாராவது அள்ளவேண்டும் என கேள்வி கேட்கும் ஜெயஸ்ரீ இதற்கு முன் எப்போதாவது கூறியிருப்பாரா? ஆனால் இது தொடர்பான சில பதிவுகள் வலையுலகில் உள்ளன.

//(ஸ்ரீரங்கத்தில் என் வீட்டையே ஒரு ப்யூட்டிஷியனுக்குத்தான் குடிவைத்திருக்கிறேன். வீட்டை அதற்கு உபயோகித்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வது முழுக்க முழுக்க அக்கம்பக்கத்தவர்கள் புகார்சொல்லும் சுகாதாரப் பிரச்சினைக்காகத்தான்.)
//
சுகாதாரப் பிரச்சினைக்காகத்தான் என்று நீங்கள் சொல்வதை நம்பிவிட்டேன்.... இப்படி சொன்ன பிறகு நம்பித்தானே ஆகவேண்டும்.

//அதே பெண்தான் எனக்குத் திருமணம் என்றால் என் வீட்டிற்கே வந்து அலங்காரம் செய்கிறாள்; நான் அப்படியேதான் மணமேடையில் அமர்ந்து மந்திரம் சொல்லி தாலிகட்டிக் கொள்கிறேன். தீண்டாமை முடிவெட்டுபவருக்காக இருந்தால் இது சாத்தியமா? யோசித்தால் குளிப்பது சுகாதாரத்திற்காகத்தான், முடிவெட்டுபவருக்காக இல்லை என்பது தெரியும்.

//
கிட்டத்தட்ட விரக்தியின் விளிம்பிற்கே வந்துவிட்டேன் இது மாதிரியான உங்கள் விவாதத்தை படித்து.... இப்போதும் உங்கள் ஒற்றை ஆளை வைத்து பேசுகின்றீர் என கருதுகின்றேன், உங்கள் ஒற்றை ஆளையோ உங்களை போன்ற ஒரு சிலரையோ தவிர்த்து பிறரெல்லாம் குளிப்பது சுகாதாரத்திற்காகத் தான் தீண்டாமைக்கு அல்ல என்றால் தண்ணீர் குடித்த தம்ளரின் மீது தண்ணீர் தெளிப்பதும், நகரசுத்தி தொழிலாளி வந்து பொங்கல் காசு வாங்கிக்கொண்டு போன பிறகு (அப்போது அவர்கள் மலம் அள்ளிய கையோடு வருவதில்லை, புதுத்துணி அணிந்து சுத்தமாகத் தான் வருகின்றார்கள்) தண்ணீர் விட்டு கழுவுவதும் எதனால்? இவை சுகாதாரத்திற்கு என நினைக்கின்றீரா நீங்களும் உங்களுக்கு சபாஷ் போட்டவர்களும், இன்னும் பல பல உதாரணங்கள் சொல்ல முடியும் ஆனால் உங்களுக்கு இதெல்லாம் தெரியாமலில்லை என்று நான் நினக்கின்றேன்.

மேலும் சமதர்மம்/சமபந்தி என்பது மேல் சாதியினர் அனுமதிக்கும் அளவுதான், அதாவது மேல் சாதியினர் அனுமதிக்கும் அளவிற்கு புழங்கலாம், அவர்கள் அனுமதித்தால் கீழ் சாதியினர் அருகில் அமரலாம், அமரவைத்து விட்டு பாருங்கள் சாதியில்லை இங்கே நானும் கீழ்சாதிக்காரரும் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம் என சமபந்தி பேசலாம், ஆனால் மேல் சாதியினரின் அனுமதியில்லாமல் கீழ்சாதிகாரர் அருகில் அமரமுடியுமா? அருகில் அமர்தல் என்பது ஒரு உதாரணமே தயவு பேருந்தில் அருகில் அமரவில்லையா என இதை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டாம், மேலும் எப்போது தலித் வீட்டிலெல்லாம் நான் சாப்பிட்டிருக்கின்றேன், அதே பெண்தான் எனக்குத் திருமணம் என்றால் என் வீட்டிற்கே வந்து அலங்காரம் செய்கிறாள்; நான் அப்படியேதான் மணமேடையில் அமர்ந்து மந்திரம் சொல்லி தாலிகட்டிக் கொள்கிறேன் என்று சொல்லும் போதே தெரியவில்லையா சமதர்ம சமுதாயத்தில் சாதாரணமாக நடக்க வேண்டிய ஒரு நிகழ்வு சுட்டி காட்டி சாதனை போல சொல்லப்படும் அளவிற்கோ அல்லது பிறரிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டிய அளவிற்கோ இருக்கின்றதென்பதிலேயே தெரியவில்லையா சமூகம் ஜெயஸ்ரீ சொல்லிக்கொண்டிருப்பது போல இல்லையென்று.

//“நான் ஒதுக்கீட்டை அனுபவித்துப் படித்து முன்னேறிவிட்டேன்; என் மகனை/மகளை என்னால் படிக்கவைத்து ஓப்பனிலேயே சீட்வாங்கமுடியும்” என்று சொல்லி, அந்தந்த சமூகத்தினர் அவர்களுக்குக் கீழ் பள்ளி வாசலையே மிதிக்காத பெற்றோரின் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கட்டுமே. எத்தனைபேர் மதத்தை திட்டுவதை நிறுத்திவிட்டு இதைச் செய்வார்கள்? எனக்குத் தெரிந்து மூர்த்தி மட்டும் இதைச் சொல்லி இருக்கிறார்.
//
மதத்தில் இருந்துகொண்டே அதே மதத்தின் பல சீர்கேடுகளை திட்டிக்கொண்டே இதை செய்து கொண்டிருப்பவர்கள் இருக்கின்றார்கள் என்னையும் சேர்த்து, ஏற்கனவே எங்களில் பல சொந்தகாரர்களும் இந்த தலைமுறை சொந்தங்களும் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர், ஸ்காலர்ஷிப் வாங்குவதற்கான விதிமுறைகள் பூர்த்தி செய்திருந்த போதும் என்னால் பணம் கட்ட முடியும் பணம் கட்ட முடியாத பிறர் பயன் படுத்திக்கொள்ளட்டும் என்று கூறியவர் போன தலைமுறை, மருத்துவர் கோவிந்தசாமி விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் அவரது மகளுக்கு மிகப்பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை பயன் படுத்தவில்லை, அவரது மகளுக்கு அவர் சொன்னது நீ இட ஒதுக்கீட்டை பயன் படுத்தக்கூடாது பொது ஒதுக்கீட்டில் நீயாகத்தான் படிக்க வேண்டும் என்றார் (அப்போது அவர் சட்ட மன்ற உறுப்பினர் அல்ல) ஜெயஸ்ரீக்கு இதெல்லாம் தெரியாததால் யாருமே செய்யவில்லை என்று அர்த்தமில்லை, ஆனால் இதில் ஓட்டையும் இல்லாமலில்லை, இந்த ஓட்டைக்காகவே யாரும் மத சீர்கேட்டை கேள்விக்குள்ளாக்க கூடாது என்பது எந்த நியாயம்??

//அப்புறம் சங்கரமடம்? தெரியாமலே கேட்கிறேன். ஏதோ ஒரு குழுவினர்(சைவ மதத்திலிருக்கு பிராமணர்களிலும் ஒரு பிரிவினர்?) தங்களுக்குள் ஒரு மடம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நான் நினைத்துவந்திருக்கிறேன். இதுமாதிரி வைணவர்களில்கூட எக்கச்சக்க பிரிவில் மடங்கள் இருக்கின்றன. யாரும் எந்தக் குழுவினரும் தங்களுக்குள் எதையும் நிறுவி வாழ்ந்துகொள்ளலாம். விரும்புவர்கள் செல்வார்கள். விரும்பாதவர்கள் நிராகரிப்பார்கள். இதன் எந்தத் தனி ஒன்றும் முழுமையான இந்துமதத்தைச் சொந்தம் கொண்டாட முடியாது என்பதுபோலவே அல்லாதவர்கள் இங்கே சொந்தம்கொண்டாடத் தேவை இல்லை என்றே நினைத்துவந்திருக்கிறேன். இவை மட்டும்தான் அங்கீகரிக்கப்பட்டவை என்று அரசால் முத்திரைகுத்தப் படவும் இல்லை. இவை தவறும்போது சட்டம் உள்ளே நுழையாமலும் இல்லை. அப்படி ஒன்றிற்கு தலைமைப் பதவியைப் பிடித்து சாதிக்கப் போவது என்ன என்று புரியவில்லை.
//
டோண்டு இரட்டை தம்ளர் முறையை ஒழிக்க தலித்துகள் தனிக்கடை வைத்து கொள்ள கூறினாரே அந்த தர்க்கத்திற்கும் இதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை....

//கோவிலுக்குள் எல்லா ஜாதிக்காரர்களும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்வதுபோன்ற சமூகநீதியாகவோ, அல்லது இது கிடைத்தால் பெண்ணடிமைத்தனம் ஒழிந்துவிடும் என்றோ, பெண்ணடிமைத்தனத்துக்கு இந்துமதத்தின் இந்த ஒரு கூறுதான் காரணம் என்ற ஜல்லியையோ நம்ப நான் தயாராக இல்லை.
//
ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா கோவிலுக்குள் எல்லா ஜாதிக்காரர்களும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்வதுபோன்ற சமூகநீதி எனபது ஜல்லியா? அயர்ச்சியாக உள்ளது... அதையும் விட கோபமாக உள்ளது, எல்லாவற்றையும் விட வெறுப்பாக உள்ளது, இப்படியெல்லாம் இன்னமு பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது, இன்னும் மீதியையும் படித்து எழுதும் அளவிற்கு என் கோபத்தையும்,அழுத்தத்தை கட்டுக்குள் வைக்குமாறு ஆண்டவனை வேண்டுகின்றேன்...

//பூணூலை அறுப்பதும் பாப்’கட் செய்துகொள்வது, அசைவ உணவுகளை உண்பது போன்ற இப்படிப் பட்ட மேம்போக்கான புற அடையாளங்களைத் தொலைப்பதுபோன்ற தீர்வுகளை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பதால் எப்படி மாற்றம் வரும்? மாற்றம் மனதில் அல்லவா வரவேண்டும். சட்டைக்குள் இருக்கும் பூணூலை அவிழ்த்ததும் மனிதனுக்கு உலகம் வேறுமாதிரி தெரியுமா?
//
முதலில் பூணுல் மாதிரியான வெற்று புற அடையாளங்களை கூட களைய முடியாதவர்களிடமிருந்து எந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்??

//நானும் பூணூல் போட்டுக்கொள்வேன் என்று சொல்லும்போதே பூணுல் போட்டவன் உசத்தி என்று ஒத்துக்கொள்வது போலாகாதா?
//
//
ஏற்கனவே ஒருமுறை சொல்லியதை இப்போதும் சொல்கிறேன்: என் வசதிக்காக நான் எந்த உடையும் அணிவேன்
//
சபாஷ் டோண்டு அய்யாவின் இரட்டை தம்ளர் முறை உதாரணம் இந்த வாதத்திற்கும் பொறுந்தும்,

சரி அப்போ பூணுல் போட்டுக்கொண்டு இருக்கின்றார்களே என்ன வசதிக்காக, எனக்கு தெரிந்து என் நண்பன் அதில் சாவி தொங்கவிடுவான் அதற்காகவா?? (எப்படி சாவி தொங்க விடுவான் என கேட்பவர்கள் தனிமடலில் கேட்டால் விரிவாக அவன் பூணுலில் தொங்கவிட்டிருக்கும் சாவியை படம் எடுத்தே அனுப்பி வைக்க தயாராக உள்ளேன்.)
//உங்களுக்கு ஸ்ரீரங்கத்தில் பிறந்ததால் பெரியார் புரியவில்லை என்று சொல்வீர்களானால் வேறு எப்படிச் சொல்லி இருக்கிறார் என்றும்,
//
//ஏன் இப்படி நவீன கவிதை மாதிரி புரியாமலே எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார், இதை எல்லாம் யார் புரியும்படி மொழிபெயர்க்கப் போகிறார்கள் என்றும் சொல்லுங்கள்.
//

பலரும் தெளிவாக இருக்கும் இடத்தில் உங்களுக்கும் ஒரு சிலருக்கும் மட்டும் பெரியாரிடம் குழப்பம், சில மாயாஜால, பேய்,சாமி தொடர்களை தொலைக்காட்சியில் பார்த்து என் தாய் சொன்ன வார்த்தை பெரியார் வந்து இத்தனை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு அழிச்ச சூனியம்,பேயிமூடப்பழக்கத்தை இவனுங்க இப்படி திரும்ப கொண்டுவரானுங்களே என்றார், இப்படி பெரியாருக்கு சர்ட்டிபிகேட் வழங்கிய என் தாய் கடுமையான கடவுள் நம்பிக்கை உள்ளவர், ஆத்திகவாதியான என் தாய் பெரியார் விடயத்தில் தெளிவாகவே இருக்கின்றார்.

//எல்லாருக்குமான கல்வியும், சமுதாயச் சூழ்நிலைகளுமே இந்த வேற்றுமைகளை இந்தியாவில் இன்னும் வேகமாக மாற்றும் என்று திடமாக நம்புகிறேன்.
//
முதலில் எல்லோருக்குமான கல்வி இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக வழங்கப்படவில்லை, தற்போது இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக்கொண்டுள்ளது, ஆனால் அதற்கு ஆப்பு வைக்க முனைபவர்கள் யாரென்பது எல்லோருக்கும் தெரியும் தானே??

ஜெயஸ்ரீ, //சமுதாயச் சூழ்நிலைகளுமே // என்று எதை குறிக்க வருகின்றீர், கல்வியோ பொருளாதார உயர்வோ சமுதாயத்தில் சாதிய உயர்வு தாழ்வை நீக்கவில்லை என்பது உண்மை, அதற்கு காரணம் மதம், மதமும் மதம் தந்த ஆழ் நம்பிக்கையும், மதம் கொடுத்த சிலருக்கு உயர்வும்/ பலருக்கு தாழ்வும் அதை கட்டி காக்க முயல்பவர்களும்.

"எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நிற்கும்" என்பதற்காகத்தான் அந்த தலைப்பே...

//நாவிதனின் மகன் நிரலி எழுதப் போனாலும், அவனை ‘இந்திய’
உலகம் நாவிதனாகத்தான் பார்க்கும்.
பிராமணப் பெண்/பையன் ப்யூட்டி பார்லரில் முடி வெட்டினாலும், அதிதாஸில்
வேலை செய்தாலும் பிராமண பெண்/பையன் தான்.
//
என்னுடைய திருமண பத்திரிக்கையில் என் பிறப்பால் வந்த சாதிப்பெயர் இருக்காது, எங்கள் குடும்பத்திற்கு அதிக நெருக்கம் இல்லாத ஆனால் தெரிந்தவர்கள் வீடுகளுக்கு திருமண அழைப்பிதழ் வைக்க சென்ற போது நானும் என் தந்தையும் எதிர்கொண்ட கேள்விகளில் சில

"தம்பி ஊட்ல பாத்த பொண்ணு தானே?" அதாவது காதல் திருமணமா என்று மறைமுகமாக கேட்கின்றார்கள்

"நீங்க பிள்ளையா/செட்டியாரா?(யாதவ சாதியினரை பிள்ளை என்று அழைப்பார்கள் )" மறைமுகமாக நீ என்ன சாதி என்று கேட்கின்றார்கள்

ஏனென்றால் சாதிப்பெயர் என் அழைப்பிதழில் இல்லை, நிரலி எழுதும் தற்போதைக்கு சிங்கப்பூரில் இருக்கும் என் சாதி எதற்கு அவர்களுக்கு,(இதை கேட்டதில் பல சாதியினரும் அடக்கம்).

எல்லாவற்றையும் விடுங்கள்...

ஜெயஸ்ரீக்கும் சபாஷ் போட்டவர்களுக்கும் ஒரே ஒரு கேள்வி சாதிக்கு மதம் காரணமில்லையென்றால் வேறு எது காரணம்?

"எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நிற்கும்" என்பதற்காகத்தான் அந்த தலைப்பே...


வாழ்க்கை நாம் இருக்கும் வட்டத்தையும் தாண்டியது, நாம் பார்க்கும் பார்வையையும் தாண்டியது நம் வட்டத்தை தாண்டி பார்க்கும் போது சில நிஜங்கள் முகத்தில் அறையும் அந்த நிஜத்தை பார்க்க சக்தி இருந்தால் பார்க்கலாம் அல்லது மீண்டும் நம் வட்டத்தினுள் சுருங்கிக்கொண்டு இனியெல்லாம் சுகமே என இருக்கலாம்.

இப்படி வட்டத்தை விட்டு வெளியில் வந்து பார்ப்பவர்களை பற்றியும் விமர்சனமில்லை, வட்டத்தினுள்ளேயே இருந்து கொண்டு இனியெல்லாம் சுகமே என்று நினைத்துக் கொள்பவர்களை பற்றியும் எனக்கு கவலையிலை, ஆனால் வட்டத்தை விட்டு வெளியில் வராமல் அவர்கள் உள் வட்டத்தில் இருப்பது தான் உலகம் நீங்கள் இப்படி சொல்வதெல்லாம் நான் கண்டதேயில்லை அபாண்டமாக எழுதுகிறார்கள் என்று கூறுபவர்களை நினைக்கும் போது வேதனையான சிரிப்பு தான் வருகின்றது.


இன்னும் நிறைய நிறைய எழுதலாம், இதோ காலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எழுதிக்கொண்டுள்ளேன், வாழ்க்கையிலும், அலுவலகத்திலும் கூடுதல் பொறுப்புகள் வந்ததால் இங்கே நேரம் செலவழிக்க முடியவில்லை, இன்று வேறு ஒன்று எழுத வந்தேன், ஜெயஸ்ரீயின் சிறப்பான வாதங்களை கண்டு புல்லரித்து போய் இங்கே முட்டிக்கொண்டேன். என்னிடம் கேள்வி எழுப்புபவர்கள் உடன் பதில் எதிர்பார்க்காதீர்கள் நேரம் கிடைத்தால் முடிந்தால் பதிலளிக்கின்றேன்.

//பெரியவர்கள்(65 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இங்கேயும் செய்யலாம்.//
ம்... ஜெயஸ்ரீ சொல்வது 65 வயதிற்கு மேற்பட்ட சில பெரியவர்கள் செய்வது மட்டுமேயா? இது உண்மையா? 65 வயதிற்கு குறைவானவர்கள் எப்படி என்ன செய்கின்றார்கள் என்பதை ஜெயஸ்ரீ சபாஷ் போட்டவர்களின் மனசாட்சிக்கும் விட்டுவிடுகின்றேன், இருந்தாலும் ஒன்றே ஒன்று 65 வயதிற்குட்பட்ட எத்தனை பேர் குறைந்த பட்சமாக புற அடையாளமான பூணுலை தவிர்த்திருக்கின்றனர்??

//ஆனால் அரிவாள் கலாசாரம் என்று எப்படி தன் ஊர் மக்களைப் பற்றி குழலி வருத்தப்படுகிறாரோ அதுபோன்ற ஒரு அறியாமை அல்லது இப்படி நடக்கவில்லை என்றால் நமக்கு சொர்க்கம்/மோட்சம் கிடைக்காதோ போன்ற தேவை இல்லாத ஆனால் படிந்துவிட்ட அச்சங்கள் மட்டுமே அவர்களிடம் இருப்பதால் என்னால் அவர்களை ஒரு வருத்தத்துடனாவது புரிந்துகொள்ள முடிகிறது.
//
//அரிவாள் கலாசாரம் என்றால் சரி அறியாமை என்று ஒப்புக்கொள்ளும் மக்கள் அதே சந்தேகத்தின் பலனை இவர்களுக்குத் தரமாட்டார்கள்
//
அரிவாள் கலாசாரத்தின் அறியாமையின் மூல காரணம் கல்வியறிவின்மை(அந்த பிரச்சினையின் வேரை நோண்டினால் அது நிற்குமிடம் சாதி, மதம்) நீங்கள் சொல்லும் அறியாமையின் காரணம் மதம், அந்த மத்தத்தை அழிக்க சொல்லிதான் இந்த பதிவே, இந்த விடயத்தில் உண்மையில் கவலைப்படும் நீங்கள் தான் இந்த பதிவிற்கு முதல் ஆதரவு தந்திருக்க வேண்டும்...

நன்றி


//முதலில் பூணுல் மாதிரியான வெற்று புற அடையாளங்களை கூட களைய முடியாதவர்களிடமிருந்து எந்த
மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்??
சரி அப்போ பூணுல் போட்டுக்கொண்டு இருக்கின்றார்களே என்ன வசதிக்காக, எனக்கு தெரிந்து என் நண்பன்
அதில் சாவி தொங்கவிடுவான் அதற்காகவா?? (எப்படி சாவி தொங்க விடுவான் என கேட்பவர்கள் தனிமடலில்
கேட்டால் விரிவாக அவன் பூணுலில் தொங்கவிட்டிருக்கும் சாவியை படம் எடுத்தே அனுப்பி வைக்க தயாராக
உள்ளேன்.)//
//அது பிராமணர்களில் வழிபாட்டு முறை.
//
வழி படும் நேரம் தவிர்த்து எல்லா நேரமும் அதை அணிந்திருப்பது எந்நேரம் தியானத்தில் இருப்பார்கள் என்பதாலா?, ஏன் இந்த சாதீய அடையாளம், இந்து மதம் எல்லா சாதியினருக்கும் பொது என்று சொல்லிக்கொள்ளும் போது ஏனிந்த அடையாளம், இப்போதும் சொல்கின்றேன் எப்போது தங்களால் புற அடையாளத்தை விட கூட தயாரில்லையோ அப்போதே தெரிகின்றதே எந்த மாற்றமும் மனதில் ஏற்படாது என்று.

குழலி Says:
March 13th, 2006 at 10:34 am
என் முந்தைய பின்னூட்டத்தில்

இந்து மதம் எல்லா சாதியினருக்கும் பொது என்று சொல்லிக்கொள்ளும் போது பிராமணர்களுக்கு மட்டும் எப்படி இந்த தனியான வழிபாட்டு முறை என்று படிக்கவும்

நன்றி

3 Comments:

Blogger குழலி / Kuzhali said...

வர்ணாசிரமம் இத்தனை சக்தியோடும் கட்டமைப்போடும் நின்று நிலைப்பதற்கு காரணம் அதன் அடுக்கு முறைதான், நான் மட்டும் உயர்ந்தவன் மற்றவன் எல்லாம் தாழ்ந்தவன் என்று சொல்லியிருந்தால் பெரும்பான்மை தாழ்ந்தவர்கள் என்றாவது விழிக்கும் போது மிக எளிதாக சிறுபான்மை உயர்ந்தோர் என்று கூறிக்கொள்பவர்களை அகற்றியிருப்பர் ஆனால் இதை எதிர்பார்த்து தான் மனிதனின் உளவியலை சரியாக கணித்து ஒரு சாரர் உயர்ந்தவர்கள், அடுத்த பகுதியினர் அவர்களை விட தாழ்ந்தவர் ஆனால் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள், அதற்கு அடுத்த தட்டு மக்கள் கடைசி தட்டு மக்களைவிட உயர்ந்தவர்கள் மற்ற இருவரைவிட தாழ்ந்தவர்கள் என்று அடுக்கு முறையை உருவாக்கினர், ராகிங்கினால் பாதிக்கப்படும் அதே மாணவன் மறு ஆண்டு ராகிங் செய்வது போல மேல் சாதியனரின் சாதிய கொடுமைகளை அனுபவித்துக்கொண்டே அடுத்த அடுக்கில் இருப்பவர்களிடம் அதே சாதி கொடுமையை செய்ய முடிகின்றது, விளைவு மற்ற மூன்று அடுக்குகளில் இருப்பவர்களால் உயர் சாதி ஆதிக்கத்தை எதிர்த்தல் என்ற தளத்தில் இணைய முடியவில்லை,வெள்ளையர்/கருப்பர் இனவெறியில் இரண்டே அடுக்கு இருப்பதால் ஓரிரு புரட்சிகள், விழிப்புணர்சிகள் ஓரிரு தலைமுறைகளில் இந்த கொடுமையை ஒழிக்க முடிகிண்றது ஆனால் இந்து மதத்தில் இந்த அடுக்கு முறை சாதீயத்தை ஆயிரக்கணக்காண வருடங்களாக காத்து வருகின்றது, இது தான் உலகெங்கும் தீண்டாமை வேறுபாடுகள் இருப்பதாக கூறுவதற்கும் இந்து மதத்தில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம்.இந்த உலகின் மிகப்பெரிய கிரிமினலாக நான் கருதுவது வர்ணாசிரத்தில் அடுக்கு முறையை புகுத்தியவனைத் தான், எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எத்தனை தூரம் கிரிமினல் தனமாக யோசித்து இந்த அடுக்கு முறையை உருவாக்கியிருக்கிறான்!!!

இந்த வர்ணாசிரம அடுக்கு சாதிமுறையை அழிக்க அதன் மூல காரணி இந்து மதத்தை என்ன செய்யலாம்?

5:20 PM  
Blogger குழலி / Kuzhali said...

http://bhaarathi.net/ntmani/?p=214

5:22 PM  
Blogger குழலி / Kuzhali said...

டோண்டு அய்யாவின் நாகரிகம்(?!) கலக்கல்… மேலும் எழுதினால் பதிவின் நோக்கம் திசை திரும்பிவிடும் என்பதால் தற்போதைக்கு தடா…

12:54 AM  

Post a Comment

<< Home